தத்த தனதன தனனா தனனா
தத்த தனதன தனனா தனனா
தத்த தனதன தனனா தனனா …… தனதான
……… பாடல் ………
நெய்த்த சுரிகுழ லறலோ முகிலோ
பத்ம நறுநுதல் சிலையோ பிறையோ
நெட்டை யிணைவிழி கணையோ பிணையோ …… இனிதூறும்
நெக்க அமுதிதழ் கனியோ துவரோ
சுத்த மிடறது வளையோ கமுகோ
நிற்கு மிளமுலை குடமோ மலையோ …… அறவேதேய்ந்
தெய்த்த இடையது கொடியோ துடியோ
மிக்க திருவரை அரவோ ரதமோ
இப்பொ னடியிணை மலரோ தளிரோ …… எனமாலாய்
இச்சை விரகுடன் மடவா ருடனே
செப்ப மருளுட னவமே திரிவேன்
ரத்ந பரிபுர இருகா லொருகால் …… மறவேனே
புத்த ரமணர்கள் மிகவே கெடவே
தெற்கு நரபதி திருநீ றிடவே
புக்க அனல்வய மிகஏ டுயவே …… உமையாள்தன்
புத்ர னெனஇசை பகர்நூல் மறைநூல்
கற்ற தவமுனி பிரமா புரம்வாழ்
பொற்ப கவுணியர் பெருமா னுருவாய் …… வருவோனே
சத்த முடையஷண் முகனே குகனே
வெற்பி லெறிசுட ரயிலா மயிலா
சத்தி கணபதி யிளையா யுளையா …… யொளிகூருஞ்
சக்ர தரஅரி மருகா முருகா
உக்ர இறையவர் புதல்வா முதல்வா
தட்ப முளதட வயலூ ரியலூர் …… பெருமாளே.
……… பதம் பிரித்தது ………
நெய்த்த சுரிகுழல் அறலோ?முகிலோ?
பத்ம நறுநுதல் சிலையோ?பிறையோ?
நெட்டை இணைவிழி கணையோ?பிணையோ?……இனிதுஊறும்
நெக்க அமுது இதழ் கனியோ?துவரோ?
சுத்த மிடறு அது வளையோ?கமுகோ?
நிற்கும் இளமுலை குடமோ?மலையோ?……அறவேதேய்ந்து
எய்த்த இடை அது கொடியோ?துடியோ?
மிக்க திருஅரை அரவோ?ரதமோ?
இப்பொன் அடிஇணை மலரோ?தளிரோ?……எனமாலாய்,
இச்சை விரகுடன் மடவார் உடனே,
செப்ப மருளுடன் அவமே திரிவேன்,
ரத்ந பரிபுர இருகால் ஒருகால் …… மறவேனே.
புத்தர் அமணர்கள் மிகவே கெடவே,
தெற்கு நரபதி திருநீறு இடவே,
புக்க அனல் வயம் மிக ஏடு உயவே,……உமையாள்தன்
புத்ரன் என இசை பகர்நூல்,மறைநூல்,
கற்ற தவமுனி பிரமாபுரம் வாழ்
பொற்ப! கவுணியர் பெருமான் உருவாய் ……வருவோனே!
சத்தம் உடைய ஷண்முகனே! குகனே!
வெற்பில் எறிசுடர் அயிலா! மயிலா!
சத்தி கணபதி இளையாய், உளையாய்,……ஒளி கூரும்
சக்ர தர அரி மருகா! முருகா!
உக்ர இறையவர் புதல்வா! முதல்வா!
தட்பம் உள தட வயலூர் இயல்ஊர் ……பெருமாளே.